Friday, May 7, 2010

ஒரு மீனவரின் புலம்பல்!

கடற்கரை...

பலருக்கு பொழுதுபோக்கு;

அட, உனக்குமா?!

நீ வந்து

பொழுதுபோக்கிய தினமே

டிசம்பர் 26, 2004!




ஜப்பானிய மொழி

கற்பது கடினமாம்...

சுனாமி

எனும் சொல்லை

இனி நான் மறப்பது

அதைவிட கடினம்!




படிப்பறிவு ஏதுமில்லை

மீன்

பிடிப்பறிவைத் தவிர

எங்களுக்கு நாதியில்லை...

நாங்கள்தான்

வேறுவழியில்லாமல்

மீன்பிடித்து வாழ்கிறோம்...

உனக்கென்ன வந்தது?

எங்களைப் பிடிக்க வந்தாய்!




நம்பிக்கையே வாழ்க்கை...

மரணத்தின் மீதுதான்

தினமும் பயணம்...

கட்டுமர(ண)த்தின்மீதுதான்

தினமும் பயணம்!

உறுதியாகத் தெரியாது

அது இறுதிப் பயணமாயென்று!

ஆம்,

நம்பிக்கையே வாழ்க்கை!




தினம்தினம்

வலை வீசுகிறோம்;

ஏனோ

கவலையை வீச முடியவில்லை...

நான்காண்டுகளாகி விட்டது

என் குழந்தைகளைக்

கடலில் தொலைத்து;

இன்றுவரை சிக்கவில்லை

என் வலையில்!




நான் காக்க மறந்த

குழந்தைகளை

உனக்கு இரையாக்கினாய்...

என் வீட்டைக் காக்கும்

இறையாக்கினாய்!

கடல் நோக்கிக்

கும்பிடுகிறேன்...

குழந்தைகள் கூப்பிடும்குரல்

தொலைதூரத்தில் கேட்கிறது!